உலகத்திற்கான ஒரு டவுன் ஹால் (நகர மண்டபம்)
இதயங்கள் சந்திக்கும் இடம்
காக்ஸ்டன் ஹால் மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது மற்றும் இங்கிலாந்தில் முதல் அச்சகத்தை நிறுவிய வில்லியம் காக்ஸ்டன் நினைவாக பெயரிடப்பட்டது, இது அறிவை அணுகுவதில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாகும். துணிச்சலான புதிய கருத்துக்கள் பரிமாறப்பட்ட மற்றும் ஆராயப்பட்ட இடமாக இது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
முதலில் காக்ஸ்டன் ஹால் அரசாங்கத்தின் ஒரு கட்டிடமாக இருந்தது; ஒரு நகர மண்டபம். இருப்பினும், இது பல ஆண்டுகளாக இரட்டை பொறுப்பில் உள்ளது. இரைச்சல் மிக்க கூட்டங்கள், பேரணிகள், மனுக்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் அரசியல் செயல்பாட்டிற்கான அழைப்புகளுடன் பொதுத்துறை சார்ந்த விழாக்கள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள் இங்கு நடந்துள்ளன. காக்ஸ்டன் மண்டபத்தின் கதவுகளிலிருந்துதான் 20 ஆம் நூற்றாண்டின் பல சிறந்த யோசனைகள் மற்றும் இயக்கங்கள் உலக அரங்கில் பரவின. பெண்களின் வாக்குரிமை இயக்கம், பொதுவுடமை வாதம் மற்றும் அடிமைத்தனத்தின் பின்விளைவுகளைக் கையாளும் முதல் பான்-ஆப்பிரிக்க மாநாடு ஆகியவற்றின் குரல்கள் இங்கே என்ன நடந்தது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்.
எனவே, ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி 1977 இல் தனது செய்தியை பொது அரங்கில் கொண்டு செல்ல முடிவு செய்தபோது, இந்த மண்டபத்தை தேர்ந்தெடுத்தது சுவாரஸ்யமானது. 1977 மற்றும் 1983 க்கு இடையில் ஸ்ரீ மாதாஜி இங்கு கிட்டத்தட்ட நூறு முறை மேடையேறியுள்ளார். பெருமளவில் பொதுமக்களுக்கு தனது செய்தியை எடுத்து சென்ற இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது - அவரது வார்த்தைகள் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது. அனைவரும் வரவேற்றக்கப்பட்டனர். அனுமதி இலவசம்.
சிறந்த வங்காளக் கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூர் 1913 கோடையில் இங்கு வெற்றிகரமான தொடர் சொற்பொழிவுகளை நடத்தினார். அவரின் விரிவுரைகள், "பிரபஞ்சத்துடனான தனிமனிதனின் உறவு", "ஆத்ம விழிப்புணர்வு", " அன்பினால் உள்ள விழிப்புணர்வு" மற்றும் "சுயத்தின் பிரச்சனை" போன்ற தலைப்புகளுடன் இருந்தன. சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ மாதாஜி அவரே நேரடியாகப் பேசிய கருப்பொருள்கள் இவை. தனது முன்னோடியைப் போலவே, அவர் மேற்கத்திய பார்வையாளர்களுடன் பண்டைய கிழக்கு அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களை தங்களுக்குள் ஒரு பயணத்தில் அழைத்துச் செல்லவும் விரும்பினார்.
"இடம் மற்றும் காலம் ஆட்சி செய்வதை நிறுத்தும் இடமும், பரிணாம வளர்ச்சியின் இணைப்புகள் ஒற்றுமையில் ஒன்றிணைக்கும் இடமும் நமக்குள் உள்ளது".
ரவீந்திரநாத் தாகூர்
இருப்பினும், ஸ்ரீ மாதாஜியைப் பொறுத்தவரை, அவரது விரிவுரைகளின் நோக்கம் வெறுமனே ஒரு புதிய யோசனையை ஆராய்வது அல்ல, ஆனால் அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதாகும். அவரது விரிவுரைகள் எப்போதும் கூடுதல் வெகுமதியோடு வந்தன. மாலை இறுதியில் அவர் எப்போதும் மக்களுக்கு ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தை வழங்கினார். ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் அவர்களை வழிநடத்தி, பார்வையாளர்களுக்கு தங்கள் சொந்த ஆழத்தை உணர வாய்ப்பு வழங்கப்பட்டது. தாகூரின் "பிரம்மத்தை உணர்தல்", ஸ்ரீ மாதாஜியின் "உண்மையான சுயத்தின் அனுபவம்" ஆனது.
மீண்டும் ஒருமுறை, காக்ஸ்டன் ஹாலின் படிகளிலிருந்து ஒரு புரட்சிகர இயக்கம் தொடங்கப்பட்டது. ஆன்மீக மட்டத்தில் மனிதனின் உயரும் திறனில் ஒரு அடிப்படையான அடி எடுத்து வைக்கப்பட்டதின் விளைவாக பலர் தங்களுக்குள் ஒரு ஆழமான மாற்றத்தையும், அவர்களின் உலகக் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றத்தையும் உணர்ந்தனர்.
![]()
ஆறு ஆண்டுகளாக ஸ்ரீ மாதாஜி காக்ஸ்டன் ஹாலில் அனைத்து தரப்பு மக்களிடமும் பேசினார். அவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர் நேரம் ஒதுக்கினார். "நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?", "என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?", "கடவுள் நம்மை ஏன் படைத்தார்?", "கடவுள் இருக்கிறாரா?" போன்ற பெரிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். இறுதியில் அனைவரும் தங்கள் உண்மையான ஆத்மாவுடன் இணைய அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு மேற்கில் ஸ்ரீ மாதாஜியின் பொது சேவை(இறை சேவை) உண்மையிலேயே தொடங்கியது. இங்கே காக்ஸ்டன் ஹாலில், அனைவருக்கும் வரவேற்பு இருந்தது, மேலும் மிகவும் மதிப்புமிக்கது இலவசமாக வழங்கப்பட்டது. ஆத்ம விழிப்புணர்வு பெற்றவர்களில் பலர் அவரிடம் தொடர்ந்து இருந்துகொண்டு, உண்மையைத் தேடும் பலரைச் சென்றடைவதில் அவரது முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர்.
1980 ஆம் ஆண்டு ஸ்ரீ மாதாஜி அவர்களே , “(சத்தியத்துக்கான)தேடுதல் தொடங்கி விட்டது, பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன(உண்மையை உறுதியளிக்கும் மக்கள்). இது கடையல்ல, ஒரு கோவில். சந்தையில் உள்ள ஒரு கோவிலின் மதிப்பு மிகவும் குறைவு. கோயிலுக்குச் செல்ல ஏழு மலைகள் ஏறிச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அதிக மதிப்பு உண்டு. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே உயிருடன் அங்கு சென்றடைய முடியும். எனவேதான், மக்களுடன் பேசுவதற்காக மலையிலிருந்து கோவில், லண்டன் காக்ஸ்டன் ஹாலுக்கு வர வேண்டியிருந்தது" என்று கூறினார்.
ஸ்ரீ மாதாஜி தனது ஆத்ம விழிப்புணர்வு என்ற பரிசுடன் அனைவரையும் வரவேற்று அரவணைத்தார்.
"அனைத்து வரம்புகளையும் வரவேற்று அவற்றைக் கடந்து செல்வதே அன்பின் உயர்ந்த செயல்பாடு" என்று தாகூரின் வார்த்தைகளில், ஸ்ரீ மாதாஜியின் அன்பும் அன்பின் பரிசும் இதயத்தையும் உலகையும் ஒளிரச் செய்ய அனைத்து தடைகளையும் தாண்டிச் செல்கின்றன.